ஒரு தலையின் உள்ளே வண்ணமயமான, கற்பனை நிறைந்த இயற்கைக் காட்சியைக் காட்டும் விளக்கப்படம்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையம்

பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கான வழிகாட்டுதல்கள்

பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக உள்ளடக்கத்தை உலாவவும், கல்வி தொடர்பான உள்ளடக்கத்தைக் கண்டறியவும், இசையைக் கேட்கவும் தனித்துவமான வாய்ப்பை Spotify போன்ற சேவைகள் வழங்குகின்றன. உங்களில் பலர் உங்கள் பிள்ளைகளைத் தூங்க வைப்பதற்கான தாலாட்டுப் பிளேலிஸ்ட்களின் மூலம் பலனடைந்திருப்பீர்கள். இன்னும் பலர் உங்கள் பிள்ளைகளின் வயதில் நீங்கள் இருக்கும்போது கேட்டு ரசித்த குறிப்பிட்ட பாடலைப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். சமீபத்திய ஆண்டுகளில் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் தளங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகியுள்ளது. இந்தத் தளங்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் உள்ள உள்ளடக்கத்தையும் அம்சங்களையும் பிள்ளைகள் அணுகுவதைச் சிறந்த முறையில் வரம்பிடுவது எப்படி என்பதை அறிந்துகொள்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கலாம்.

அலெக்ஸ் ஹோம்ஸின் படம்

நான் அலெக்ஸ் ஹோம்ஸ். நான் Spotify உட்பட பல்வேறு முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களின் சர்வதேசப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன், பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் தீங்குகள் தொடர்பான அவர்களின் அணுகுமுறை தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். நான் The Diana Award என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தின் துணைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணிபுரிகிறேன். இது ‘இளைஞர்களுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு’ என்ற இளவரசி டயானாவின் நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சியாகும். எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட துன்புறுத்தலைத் தொடர்ந்து எனது 16-வது வயதில் Anti-Bullying Ambassadors என்ற 'ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்கும்' திட்டத்தை நிறுவினேன். BBC Children in Need என்ற BBC-இன் தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றுகிறேன். நீங்கள் நினைப்பதுபோல், சிறார்களின் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு விஷயத்துக்கும் தீர்வுகாண்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

ஆன்லைன் உலகில் பிள்ளைகளுக்கு எந்த வகையான உள்ளடக்கமும் அம்சங்களும் பொருத்தமானவை என்பதைப் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுடன் இணைந்து முடிவுசெய்ய வேண்டும் என்று நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன். அவர்கள் எந்த வகையான உள்ளடக்கத்தைக் கேட்பதில் உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்பதைப் பற்றி உரையாடுங்கள். மேலும் உள்ளடக்கம் அவர்களுக்கு வருத்தத்தையோ கவலையையோ ஏற்படுத்தினால் அவர்கள் என்ன செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த முடிவுகளை எடுப்பதில் உதவ, பிள்ளைகளுக்காக Spotify வடிவமைத்துள்ள சமீபத்திய கருவிகள் மற்றும் அம்சங்களை விளக்கும் ஒரு வழிகாட்டியை Spotify கீழே கொடுத்துள்ளது. வெளிப்படையான உள்ளடக்கத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பெற்றோர் கட்டுப்பாடுகள், எந்தவொரு தேவையற்ற உள்ளடக்கம் அல்லது கவன ஈர்ப்பு தொடர்பாக நீங்கள் புகாரளிக்கக்கூடிய வழிகள் ஆகியவை இதிலடங்கும்.

உங்கள் பிள்ளை பயன்படுத்தக்கூடிய அனைத்து வெவ்வேறு சேவைகளையும் கண்காணிப்பது கடினமானதாகும். எனவே Spotifyயையும், பிள்ளை கேட்கும் இசையின் வகைகளையும், அவர் பிறருடன் தொடர்புகொள்ளும் வழிகளையும் புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பெற்றோரும்/பாதுகாவலரும் தங்கள் பிள்ளையுடன் இணைந்து பணியாற்றுமாறு பரிந்துரைக்கிறேன். பிள்ளையின் செயல்பாடு பிற குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து அவர் யோசிப்பதற்கும், பிளேலிஸ்ட் தலைப்புகள், சுயவிவரங்கள், பிளேலிஸ்ட் படங்கள்/பதிவேற்றங்கள் ஆகியவை குறித்து அவர் கவனமுடன் இருப்பதற்கும் இது உதவிகரமாக இருக்கக்கூடும். அவரின் பிளேலிஸ்ட்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவியுங்கள். இது அவருடன் சேர்ந்து தேர்வுசெய்யவும், இணைந்திருக்கவும், ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையலாம்.

பிள்ளைகள் தங்களை வெளிப்படுத்தவும் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதில் இசையும் ஒலியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரியான உதவியுடன், உங்கள் பிள்ளைகளின் தனியுரிமை, சுதந்திரம், உங்களின் தனிப்பட்ட வளர்ப்புப் பாணி ஆகியவற்றைச் சமநிலையுடன் கையாளும் அதேவேளையில் Spotify போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளை அதிகத் தன்னம்பிக்கை, வலிமை மற்றும் ஆர்வம் உடையவராக மாற உதவலாம். முக்கியமாக, டிஜிட்டல் உலகத்தைப் பற்றி உங்கள் பிள்ளை கற்கும்போது அவருக்கு உதவ நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த, இந்த விஷயங்கள் குறித்து அவருடன் நீங்கள் பேசுவது சிறந்த வழியாகும்.

அலெக்ஸ் ஹோம்ஸ், OBE

சிறார் பாதுகாப்பு நிபுணர்

www.antibullyingpro.com

சிறார் பயனர்களுக்கான எங்கள் உறுதிப்பாடு

Spotify என்பது டிஜிட்டல் இசை, பாட்காஸ்ட் மற்றும் ஆடியோபுக் சேவையாகும். இது உலகெங்கிலும் உள்ள கிரியேட்டர்களின் லட்சக்கணக்கான பாடல்கள் மற்றும் பிற உள்ளடக்கத்துக்கான அணுகலை வழங்குகிறது. டிஜிட்டல் உலகத்தில் பயணம் செய்வது பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் சவாலான ஒன்றாக இருக்கலாம் என்பதையும் உங்கள் குடும்பத்திற்கு எந்த உள்ளடக்கம் மற்றும் அனுபவங்கள் சரியானதாக இருக்கும் என்பது தொடர்பான முடிவுகள் பெரும்பாலும் தனிப்பட்டவை என்பதையும் புரிந்துகொள்கிறோம். சிறார் பயனர்களுக்கு ஏற்ற சுவாரசியமான மற்றும் அவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அனுபவத்தை உருவாக்க உதவுவதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அம்சங்களையும் உருவாக்கியுள்ளோம். இவற்றில் சில:

  • பிள்ளைகளைத் தவறாகப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை முற்றிலும் அனுமதிக்காத கொள்கை
  • பிள்ளைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத மற்றும்/அல்லது தவறான நடத்தைகளைத் தடைசெய்யும் தளத்தின் விதிகள்
  • எங்கள் தளத்தின் விதிகளை மீற வாய்ப்புள்ளவற்றைக் கண்டறிய, மெஷின் லேர்னிங் சிக்னல்களும்பயனர் புகாரளித்தல் வழிமுறைகளும்
  • எங்கள் தளத்தின் விதிகளை மீறும் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து, அதற்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க இடைவிடாது செயல்படும் குழுக்கள்
  • தற்கொலை, தன்னைத் தானே காயப்படுத்துதல், முறையற்ற உண்ணும் பழக்கம் ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தை, பாதிக்கப்படக்கூடிய பயனர்கள் தேடும்போது அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்குவதற்கான மனநலம் தொடர்பான தகவல் மூலங்கள்
  • தங்கள் குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வடிவமைக்க பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகள்
  • உருவாகி வரும் அச்சுறுத்தல்களையும் தடுப்பு நுட்பங்களையும் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் Spotify Safety Advisory Council. Thorn, Diana Award, Project RockIT, Jed Foundation, Tech Coalition, WeProtect Alliance போன்ற குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து முன்கூட்டியே கருத்துகளைக் கேட்டுப் பெறுகிறோம்

பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பான சூழல் மாறிக்கொண்டே இருப்பதால், எங்களின் கொள்கைகள், கருவிகள், திறன்கள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்போம். இடைப்பட்ட நேரத்தில், சிறார் பயனர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்க உதவுவதற்கு பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களாக நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

Spotifyயில் உங்கள் பிள்ளையின் அனுபவம்

ஒரு கணக்கை உருவாக்குதல்

அனைத்துப் பயனர்களும் தங்கள் கணக்குடன் தொடர்புடைய நாட்டில் தேவைப்படும் குறைந்தபட்ச வயதை எட்டியிருக்க வேண்டும். உங்கள் பிள்ளை Spotifyயைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை எட்டவில்லை எனில் அல்லது எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில் அவருடைய கணக்கு மூடப்பட வேண்டும் அல்லது அது நிர்வகிக்கப்படும் கணக்காக இருக்க வேண்டும்.

கணக்கை உருவாக்கும்போது உங்கள் பிள்ளையின் வயதைத் துல்லியமாகக் குறிப்பிடுவது முக்கியமாகும். அது உள்ளூர்ச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் சரியான தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் வழங்கவும் உதவுகிறது.

நிர்வகிக்கப்படும் கணக்குகள்

குழந்தைகளுக்குச் சுதந்திரமாக இசை கேட்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படும் கணக்குகள் வடிமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிள்ளைகளின் கேட்கும் சூழலை வழிநடத்தவும் சீரமைக்கவும் உதவுகின்ற கருவிகளைப் பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் இவை வழங்குகின்றன. 13 வயதுக்கு (அல்லது உள்ளூர் சட்டத்திற்குப் பொருத்தமான வயதுக்கு) கீழுள்ள கேட்பவர்களுக்கான இந்தக் கணக்கு மூலம் அவர்கள் புதிய இசையைக் கண்டறியலாம், எங்களின் சிறந்த இசைப் பட்டியலின் மூலம் அவர்களின் சொந்த ரசனையைச் சீரமைக்கத் தொடங்கலாம். Premium Family திட்டத்திலும் சில பகுதிகளில் இலவசத் திட்டத்திலும் நிர்வகிக்கப்படும் கணக்குகள் கிடைக்கின்றன. இயல்பாகவே அனைத்து நிர்வகிக்கப்படும் கணக்குகளுக்கும் பின்வரும் அம்சங்கள் பொருந்தும்:

  • இசை மட்டும்: நிர்வகிக்கப்படும் கணக்குகளில் ஆடியோபுக்குகளும் பாட்காஸ்ட்களும் கிடைக்காது. மேலும், குறிப்பிட்ட பாடல்கள் கிடைக்காமல் போகலாம் (உதாரணமாக, பாலியல் ரீதியில் வெளிப்படையான வரிகளைக் கொண்டுள்ள பாடல்கள்). Spotify Safety Advisory Council மூலம் சீரமைக்கப்பட்ட எங்கள் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.
  • வரம்பிடப்பட்ட பங்கேற்புச் செயல்பாடுகள்: நிர்வகிக்கப்படும் கணக்குகளின் சுயவிவரங்கள் தனிப்பட்டவை. அவற்றைத் தேடவோ கண்டறியவோ முடியாது. அவை பிற Spotify பயனர்களைத் தேடவோ கண்டறியவோ முடியாது, மேலும் Jam மற்றும் பிளெண்ட்டில் பங்கேற்கவும் முடியாது.
  • வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அம்சங்கள்: மெசேஜ்ஸ் போன்ற வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அம்சங்களையோ உரிமைதாரர்களால் 18 வயதுக்கு மேற்பட்டவை எனக் குறிக்கப்பட்ட இசை வீடியோக்களையோ நிர்வகிக்கப்படும் கணக்குகள் அணுக முடியாது.
  • தானியங்கு தேடல் பாதுகாப்பு: பொதுவாக வயதுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கத்துடன் தொடர்புடைய வார்த்தைகளுக்கான தேடல்களும் தேடல் பரிந்துரைகளும் தடுக்கப்படும்.
  • விளம்பரப்படுத்தல்: எங்கள் Premium Family திட்டத்தில் நிர்வகிக்கப்படும் கணக்குகளில் விளம்பரமின்றி இசை கேட்கலாம். எங்கள் இலவசச் சேவையில் உள்ள நிர்வகிக்கப்படும் கணக்குகளில் விளம்பரங்கள் வழங்கப்பட்டாலும், Spotify அம்சங்கள் குறித்த தகவல் விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும், நேரடியாக பர்ச்சேஸ் செய்வதற்கான இணைப்புகள் இருக்காது.

அத்துடன், பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் எங்கள் செயலியில் உள்ள கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, சிறார் பயனர்கள் எதை அணுகலாம் என்பதற்கு வழிகாட்டலாம். ஒவ்வொரு சிறாரும் வித்தியாசமானவர்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது. எனவே பெற்றோரும் பராமரிப்பாளர்களும் தங்களுக்குச் சரியானது என்று கருதும் இசையைப் பகிர உதவும் வகையில் எங்கள் கருவிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம். இந்தக் கருவிகளில் தற்போது இவை அடங்கும்:

  • குறிப்பிட்ட கலைஞர்களையும் பாடல்களையும் பிளே செய்வதைக் கட்டுப்படுத்துதல்: அமைப்புகளில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகள் பக்கத்தின் மூலம் குறிப்பிட்ட கலைஞர்களையோ டிராக்குகளையோ பெற்றோர்கள்/பராமரிப்பாளர்கள் முடக்க முடியும்.
  • வெளிப்படையான உள்ளடக்கத்திற்கான ஃபில்டர்: கிரியேட்டர்கள் மற்றும் உரிமைதாரர்களால் வெளிப்படையானது எனக் குறிக்கப்பட்ட பாடல்களை பெற்றோர்கள்/பராமரிப்பாளர்கள் ஆஃப் செய்ய முடியும். நிர்வகிக்கப்படும் கணக்குகளுக்கு வெளிப்படையான உள்ளடக்கம் தானாகவே ஆஃப் செய்யப்படும், பெற்றோர்கள்/பராமரிப்பாளர்கள் தங்களின் அமைப்புகளுக்குச் சென்று இதை மாற்றிக்கொள்ளலாம்.
  • வீடியோக்கள் மற்றும் Canvas-க்கான கட்டுப்பாடுகள்: Spotify தளங்களில் உள்ள Canvas (பாடல்களுடன் கூடிய சிறிய லூப் காட்சிகள்), வீடியோ ஆகியவற்றுக்கான சிறார் பயனர்களின் அணுகலை பெற்றோர்கள்/பராமரிப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியும். நிர்வகிக்கப்படும் கணக்குகளுக்கு வீடியோக்களும் Canvasகளும் தானாகவே ஆஃப் செய்யப்படும், பெற்றோர்கள்/பராமரிப்பாளர்கள் தங்கள் அமைப்புகளுக்குச் சென்று இதை மாற்றிக்கொள்ளலாம்.

Spotify Kids

இது ஒரு தனிச் செயலியாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதோடு இளம் சிறாரின் வயதுடன் ஒத்துப்போகக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யுங்கள்.

உள்ளடக்கம் குறித்துப் புகாரளித்தல்

Spotifyயில் உள்ள அனைத்து உள்ளடக்கமும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் எங்கள் தளத்தின் விதிகளுடன் இணங்க வேண்டும். இந்த விதிமுறைகள் எங்களின் Spotify Safety Advisory Council உட்பட நம்பகமான உலகளாவிய பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துகளைக் கொண்டு எங்கள் நிறுவனத்திலுள்ள பாதுகாப்புக் கொள்கை நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கம் உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படுவதையும் அவற்றின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிசெய்ய உதவுவதற்கென நாங்கள் உலகெங்கிலும் 24 மணிநேரமும் செயல்படும் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளோம்.

எங்களின் கொள்கைகளும் அமலாக்க நடவடிக்கை தொடர்பான அணுகுமுறையும் நிலையானதல்ல. மாறி வரும் தவறான பயன்பாட்டின் போக்கு, உலகளாவிய ஒழுங்குமுறைச் சூழல், புதிய உள்ளடக்க வகைகள், எங்களின் நம்பகமான பாதுகாப்புக் கூட்டாளர்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை மாறிக் கொண்டே இருக்கும்.

எங்கள் தளத்தின் விதிகளை மீறுவதாக நீங்கள் நம்பும் ஏதேனும் உள்ளடக்கத்தைப் பார்த்தால், அதுகுறித்து இந்தப் படிவத்தைப் பயன்படுத்திப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கான கூடுதல் விருப்பங்கள் குறித்து மேலும் அறிய, எங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையத்திற்குச் செல்லவும்.

Spotifyயில் தனியுரிமை

எங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவை (அவர்களின் பிள்ளைகளின் தரவு உட்பட) பாதுகாப்பதிலும் பயனரின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய உதவுவதற்கான வழிமுறைகளை நிறுவுவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் மொழியில் பரிந்துரைகளை வழங்குதல், நீங்கள் விரும்பக்கூடும் என்று நாங்கள் நம்பும் பாடலைப் பரிந்துரைத்தல், நீங்கள் விரும்பக்கூடிய புதிய கலைஞரைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல் போன்றவற்றுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களைச் சில வழிகளில் நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

உங்கள் தனிப்பட்ட தரவை எப்படிப் பயன்படுத்துகிறோம், உங்களின் தனியுரிமைகள் மற்றும் விருப்பங்கள், உங்கள் அமைப்புகளை மாற்றுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மேலும் அறிய, எங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையத்தைப் பாருங்கள் மற்றும் எங்களின் தனியுரிமைக் கொள்கையைப் படியுங்கள். நிர்வகிக்கப்படும் கணக்கைப் பயன்படுத்தும் சிறார் பயனரின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளராக நீங்கள் இருந்தால், நிர்வகிக்கப்படும் கணக்குகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான எங்களின் தனியுரிமை அறிக்கை, எங்களின் சிறார் பயனரின் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றையும் பாருங்கள்.

வயதிற்கேற்ற அனுபவங்கள்

குறைந்தபட்ச வயது வரம்பைப் பூர்த்தி செய்யும் பயனர்களுக்கு மட்டுமே சில Spotify அம்சங்கள் கிடைக்கும். சிறார் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கான தேவையைப் பூர்த்திசெய்யவில்லை என்றால், அதை அவர்களால் அணுக முடியாது. இந்த அம்சங்களில் தற்போது இவை அடங்கும்:

  • இசை மற்றும் பாட்காஸ்ட் வீடியோக்கள்: சில இசை வீடியோக்களை உரிமைதாரர்கள் 18+ எனக் குறித்துள்ளதால், அவை 18 வயதுக்குக் கீழுள்ள பயனர்களுக்குக் கிடைக்காது
  • மெசேஜஸ்: எங்களின் மெசேஜ் அனுப்பும் அம்சம் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

சிறார் பயனர் ஒருவர் உங்கள் நாட்டில் Spotify சேவைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை அடையவில்லை என உறுதிசெய்யப்பட்டால் கணக்கு முடக்கப்படும், நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

நிபுணர் குறிப்பு: சிறார் பயனர்கள் எவற்றை அணுக முடியும், முடியாது என்பதைத் துல்லியமாகப் பார்ப்பதற்கான மிக எளிதான வழி, அவர்களின் கணக்கு அமைப்புகளை ஒன்றாகச் சரிபார்ப்பது அல்லது நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் அவர்களின் அனுபவத்தை நிர்வகிப்பதாகும்.

வயது உறுதிப்படுத்தல் பற்றி இங்கேமேலும் படிக்கலாம்.