Spotify தளத்தின் விதிகள்
படைப்பாற்றல் மிக்க லட்சக்கணக்கான கலைஞர்களுக்குத் தங்களின் கலை மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமும், கோடிக்கணக்கான ரசிகர்கள் அந்தக் கலையை ரசித்து அதன் மூலம் ஊக்கம் பெறுவதற்குமான வாய்ப்பை வழங்குவதன் மூலமும் – மனிதப் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதே Spotifyயின் நோக்கமாகும். பல்வேறு வகையான கலை வெளிப்பாடு, யோசனைகள், கண்ணோட்டங்கள், குரல்கள் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிப்பதன் மூலமாகவே இந்த நோக்கத்தை எங்கள் தளத்தில் அடைய முடியும் என நம்புகிறோம். அதாவது எங்கள் தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் சிலருக்குப் பிடித்தமானதாக இல்லாமலும், Spotify ஆதரிக்கக் கூடியவையாக இல்லாமலும் இருக்கலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.
எனினும், எந்தவித உள்ளடக்கமாக இருந்தாலும் எங்கள் தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என அர்த்தமல்ல. எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிப்பது தொடர்பாக நீங்கள் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளுடன் கூடுதலாக, அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த விதிகள் உதவுகின்றன.
விதிகள் என்னென்ன?
நீங்கள் ஓர் இசைக்கலைஞர், பாட்காஸ்டர் அல்லது பிற பங்களிப்பாளராக இருந்தால், எங்கள் தளத்தில் எவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழுள்ள பிரிவுகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமையானவை அல்ல.
ஆபத்தான உள்ளடக்கம்
Spotify என்பது மக்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிக்காட்டவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், பகிரவும், கற்கவும் மற்றும் உத்வேகம் அடையவும் உதவும் சமூகங்களைக் கொண்ட ஓர் இடமாகும். வன்முறையை ஊக்குவிக்காதீர்கள், வெறுப்பைத் தூண்டாதீர்கள், உபத்திரவம் அளிக்காதீர்கள், துன்புறுத்தாதீர்கள் அல்லது உடல் ரீதியாகத் தீவிரப் பாதிப்பையோ மரணத்தையோ ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிற நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
தனிநபருக்கோ குழுவிற்கோ உடல் ரீதியாகத் தீவிரப் பாதிப்பை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டுமல்ல):
- தற்கொலை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதை (வழக்கத்திற்கு மாறான உணவுப் பழக்கங்கள் உட்பட) ஊக்குவிக்கின்ற, பரப்புகின்ற, ஆதரிக்கின்ற அல்லது அவற்றுக்கான வழிமுறைகளை வழங்குகின்ற உள்ளடக்கம், குறிப்பு: நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் மனநிலையில் இருந்தாலோ அவ்வாறு யோசித்தாலோ அதிலிருந்து விடுபடுவதற்கான உதவிகளைப் பெற இங்கே பார்க்கவும்
- ஒரு குறிப்பிட்ட நபர்/குழுவிற்கு எதிராக உடல்ரீதியாகத் தீவிரப் பாதிப்பையோ வன்முறையையோ ஏற்படுத்தத் தூண்டுகின்ற, அவ்வாறு செய்யப்போவதாக மிரட்டுகின்ற அல்லது அத்தகைய செயல்களுக்கான வழிமுறைகளை வழங்குகின்ற உள்ளடக்கம்
- ஆபத்தான சவால்கள், போதைப் பொருள் பயன்பாடு உட்பட தீவிரப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள செயல்பாடுகளில் சிறார்கள் ஈடுபடுவதைப் பரப்புகின்றன அல்லது ஊக்குவிக்கின்ற உள்ளடக்கம்
தீவிரவாதத்தையோ கொடூரமான பயங்கரவாதத்தையோ பரப்பும்/ஆதரிக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- கொடூரமான பயங்கரவாதக் குழுக்களையோ அவற்றின் உறுப்பினர்களையோ மேன்மைப்படுத்தும் அல்லது புகழும் உள்ளடக்கம்
- கொடூரமான பயங்கரவாதக் குழுக்கள்/அவற்றின் உறுப்பினர்களால் நடத்தப்படும் அல்லது அவர்கள் சார்பாக நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை ஒருங்கிணைக்கும், பரப்பும், புகழும் அல்லது அச்சம்பவங்களை மேற்கொள்வதாக மிரட்டல் விடுக்கும் உள்ளடக்கம்
- கொடூரமான பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கான வழிமுறைகளை அல்லது வழிமுறைகள் அடங்கிய ஆவணங்களை வழங்கும் உள்ளடக்கம்
- தனிநபர் அல்லது ஒரு குழுவிடம் பயங்கரவாதக் குழுவிற்கு நிதியுதவி கோரும், கொடூரமான பயங்கரவாதச் செயலில் பங்கேற்கக் கோரும் அல்லது கொடூரமான பயங்கரவாதக் குழுவின் செயல்பாடுகளில் பங்கேற்கக் கோரும் உள்ளடக்கம்
ஒரு தனிநபருக்கோ அடையாளம் காணக்கூடிய குழுவிற்கோ உபத்திரவம் அளிக்கும் அல்லது தொடர்புடைய துன்புறுத்தல்களைச் செய்வதை இலக்காகக் கொண்ட உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- குறிப்பிட்ட தனிநபர்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளிக்கும் உள்ளடக்கம்
- உடல் அம்சங்களின் அடிப்படையில் உபத்திரவம் அளித்தல் உட்பட சிறார் ஒருவரை அசிங்கப்படுத்தும்/மிரட்டும் நோக்கில் தொடர்ந்து அவரை இலக்கிடுகின்ற உள்ளடக்கம்
- ஒப்புதல் இல்லாத அந்தரங்க உள்ளடக்கத்தைப் பகிர்தல் அல்லது மறுபகிர்வு செய்தல், இதுபோன்ற உள்ளடக்கத்தை விநியோகிப்பதாகவோ வெளியிடுவதாகவோ மிரட்டும் உள்ளடக்கம்
- ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை (கிரெடிட் கார்டு, வங்கித் தகவல்கள், தேசிய அடையாள எண்கள் போன்றவை) பகிர்தல், பகிரப்போவதாக அச்சுறுத்தல் அல்லது பிறரைப் பகிரும்படி ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.
இனம், மதம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, பால், பூர்வீகம், நாடு, பாலியல் நாட்டம், ராணுவப் பணி அனுபவ நிலை, வயது, இயலாமை அல்லது திட்டமிட்டுச் செய்யப்படும் ஒதுக்குதல்/ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் நடத்தை போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நபருக்கோ குழுவிற்கோ எதிராக வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டுமல்ல):
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்புகளின் அடிப்படையில் ஒரு தனிநபருக்கு அல்லது குழுவிற்கு எதிரான வன்முறைக்கு அழைப்புவிடுக்கும் அல்லது அதை ஆதரிக்கும், புகழும் உள்ளடக்கம்
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்படி பாதுகாக்கப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தனிநபருக்கோ குழுவிற்கோ எதிராக மனிதத்தன்மையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் உள்ளடக்கம்
- வெறுப்பைத் தூண்டும் குழுக்களையும் அவற்றுடன் தொடர்புடைய படங்கள் மற்றும்/அல்லது குறியீடுகளையும் பரப்பும் அல்லது புகழும் உள்ளடக்கம்
நிஜ வாழ்வில் தீங்கு விளைவிக்கும் அல்லது பொதுச் சுகாதாரத்திற்கு நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகத் தவறான அல்லது ஆபத்து நிறைந்த தவறான மருத்துவத் தகவல்களைப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல)
- எய்ட்ஸ், கோவிட்-19, புற்றுநோய், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிற நோய்கள் போன்றவை வதந்தி அல்லது உண்மையல்ல எனக் கூறும் உள்ளடக்கம்
- பல்வேறு உடல்நலக்குறைவுகளை அல்லது நோய்களைக் குணப்படுத்த, துணிகளை வெளுக்கும் பிளீச் தயாரிப்புகளைப் பருகுமாறு ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- உள்ளூர்ச் சுகாதார அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் மரணத்தை விளைவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தவறான தகவலைப் பரப்பும் அல்லது பரிந்துரைக்கும் உள்ளடக்கம்
- கோவிட்-19 வைரஸுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் வேண்டுமென்றே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும்படி மக்களை ஊக்குவித்தல் (எ.கா. “கொரோனா வைரஸ் பார்ட்டிகளை” விளம்பரப்படுத்துதல் அல்லது நடத்துதல்)
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அல்லது சட்ட விரோதமான பொருட்களின் முறைகேடான விற்பனையைப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- சட்ட விரோதமான துப்பாக்கிகள் அல்லது அவற்றின் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் உள்ளடக்கம்
- சட்ட விரோதமான போதைப் பொருட்களை விற்றல்
- அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களையோ அவற்றில் இருந்து பெறப்படும் பொருட்களையோ விற்பனை செய்யும் உள்ளடக்கம்
சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது அவர்களைத் தவறாக வழிநடத்துவதை பரப்பும், கோரும் அல்லது அதற்கு வழிவகுக்கும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- பாலியல் செயலில் சிறார் ஈடுபடுவதைக் காட்டும் சித்தரிப்புகள் அல்லது காமம் மிகுந்த நிலையில் அவர்களை நிர்வாணமாகக் காட்டுகின்ற உள்ளடக்கம்
- பணத்திற்காகச் சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
- சிறார் மீது வயது வந்தோர் பாலியல் ரீதியான ஈர்ப்பு கொள்வதை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் உள்ளடக்கம்
- சிறாரைத் தவறான எண்ணத்துடன் அணுகுவதை ஊக்குவிக்கும், இயல்பாக்கும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம்
ஏமாற்றக்கூடிய உள்ளடக்கம்
Spotifyயில் சிறந்த அனுபவத்தை உருவாக்க நம்பிக்கை அவசியம். அதாவது பயனர்கள் தாங்கள் யார் என கூறுகிறார்களோ அவ்வாறு இருப்பார்கள், அவர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள், எங்கள் தளத்தை யாரும் தவறாக வழிநடத்த முயலவில்லை என்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது. பிறரை ஏமாற்றுவதற்காகத் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
ஏமாற்றும் நோக்கத்துடன் பிறரைப் போல் ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- ஏற்கெனவே இருக்கின்ற வேறொரு படைப்பாளரின் பெயர், படம் மற்றும்/அல்லது விளக்கத்தை அப்படியே பயன்படுத்தும் உள்ளடக்கம்
- தவறாக வழிநடத்தும் விதமாகத் தன்னை வேறொரு நபராகவோ, பிராண்டாகவோ, அமைப்பாகவோ காட்டிக்கொள்ளும் உள்ளடக்கம்
தீங்கு விளைவிக்கக்கூடிய விதமாக உண்மைக்குப் புறம்பான மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மீடியாவை உண்மையானது எனப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- பேசுபவருக்கோ பிற தனிநபர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக, உண்மையான மற்றும் சரியான மூலத்திலிருந்து பெறப்பட்ட அசல் மீடியாவின் அர்த்தத்தையும் சூழல் விவரத்தையும் மாற்றும் வகையில் திருத்தப்பட்ட ஆடியோ அல்லது வீடியோ ரெக்கார்டிங்கைக் கொண்ட உள்ளடக்கம்
- உண்மை என நம்ப வைக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடியோ அல்லது விஷுவல் மீடியா. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட பாலியல் ரீதியான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கம், ஒருவர் குற்றம் புரிந்துவிட்டார் என தவறாகச் சித்தரிக்கும் உள்ளடக்கம்
தேர்தல் தொடர்பான செயல்முறைகளைத் தவறாக வழிநடத்த அல்லது அவற்றில் குறுக்கிட முயற்சி செய்யும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- குடிமைச் செயல்பாடுகளில் பங்கேற்பதை தடுக்கும் அல்லது அதற்கான ஆர்வத்தை குறைக்கும் வகையில் அந்தச் செயல்பாடு தொடர்பான தவறான வழிமுறைகளை வழங்கும் உள்ளடக்கம்
- தேர்தலில் பங்கேற்காமல் இருப்பதற்காக வாக்காளர்களை மிரட்டவோ தடுக்கவோ பரப்பப்படும் தவறான உள்ளடக்கம்
Spotify சமூகத்தைத் தவறாகப் பயன்படுத்த முயலக்கூடிய உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- கணினிகள், இணையத்தளங்கள், சிஸ்டங்கள் அல்லது பிற தொழில்நுட்பங்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ அவற்றுக்கான அங்கீகாரம் இல்லாத அணுகலைப் பெறவோ வழிவகுக்கும் வகையில் மால்வேர் அல்லது அது தொடர்பான தீங்கிழைக்கும் செயல்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை வழங்கும், பதிவிடும் அல்லது பகிரும் உள்ளடக்கம்
- பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை ஏமாற்றும் நோக்குடன் கோர அல்லது சேகரிக்க மேற்கொள்ளப்படும் ஃபிஷிங் அல்லது அது தொடர்பான முயற்சிகளைக் கொண்ட உள்ளடக்கம்
- விரைவில் பணக்காரர் ஆகுதல், பிரமிடு திட்டங்கள் போன்ற முதலீடு மற்றும் நிதி மோசடிகளைப் பரப்பும் அல்லது பிறரை ஏமாற்றிப் பணத்தை வழங்கச் செய்வதை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம்
Spotifyயில் அற்புதமான உள்ளடக்கங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இருப்பினும், எங்கள் தளத்தில் குறிப்பிட்ட சிலவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதிகப்படியான வன்முறை நிறைந்த/கொடூரமான உள்ளடக்கத்தையும் வெளிப்படையான பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தையும் இடுகையிடாதீர்கள். தவிர்க்க வேண்டியவை:
வன்முறை, கோரம், பிற அதிர்ச்சியூட்டும் படங்கள் போன்ற கொடூரமான அல்லது அவசியமற்ற சித்திரிப்புகளைப் பரப்பும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- கடுமையாகச் சிதைந்த அல்லது வெட்டப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்ட உள்ளடக்கம்
- விலங்குகளைத் துன்புறுத்துவதை அல்லது சித்திரவதை செய்வதை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்
வெளிப்படையாகப் பாலியல் ரீதியான விஷயங்களைக் கொண்ட உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- பாலியல் இச்சையைத் தூண்டும் நோக்கத்திற்காக ஆபாசப் படம் அல்லது நிர்வாணம்/பிறப்பு உறுப்புகளின் காட்சிச் சித்திரிப்புகளைக் கொண்ட உள்ளடக்கம்
- வன்புணர்வு, முறையற்ற பாலுறவு, விலங்குகளைப் புணர்தல் போன்ற பாலியல் ரீதியான விஷயங்களை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் உள்ளடக்கம்
சட்ட விரோதமான உள்ளடக்கம்
சட்டம் என்பது சட்டம்தான். நீங்கள் யாராக இருந்தாலும் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்குவது உங்கள் பொறுப்பாகும். தவிர்க்க வேண்டியவை:
பொருந்தக்கூடிய சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் மீறும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- பொருந்தக்கூடிய பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத உள்ளடக்கம்
- எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையையும் செய்யத் தூண்டும் அல்லது பரப்பும் நோக்கம் கொண்ட உள்ளடக்கம்
பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் உள்ளடக்கம் (இவை உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல):
- போதுமான அனுமதிகளின்றி Spotifyயில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம்
- மூன்றாம் தரப்புப் பதிப்புரிமைகளையோ வர்த்தக முத்திரைகளையோ மீறும் உள்ளடக்கம்
இந்த விதிமுறைகளை Spotify எப்படி அமல்படுத்துகிறது?
தொழில்நுட்பத்தையும் மதிப்பாய்வாளர்களையும் பயன்படுத்தி உலகம் முழுவதும் சீராகவும் குறிப்பிடத்தகுந்த அளவிலும் இந்த விதிமுறைகளை அமல்படுத்த Spotify முயல்கிறது. பயனர் புகார்களுடன் கூடுதலாக நாங்கள் தானியங்கு கருவிகளையும் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகள் தளத்தின் விதிகளை மீறக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிய பல்வேறு சிக்னல்களைச் சார்ந்துள்ளன.
எங்களின் உலகளாவிய வல்லுநர் குழுக்கள் எங்கள் தளத்தின் விதிகளை உருவாக்கி, நிர்வகித்து, அமல்படுத்துகின்றன. கொள்கைகளை மீறும் சாத்தியமான உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கப்பட்டாலோ, அது கண்டறியப்பட்டாலோ பொருத்தமான அமலாக்க நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு எங்கள் குழுக்கள் பணியாற்றும்.
விதிகள் மீறப்பட்டால் என்னவாகும்?
விதிமீறல் தொடர்பான முடிவுகளை நாங்கள் மிகத் தீவிரமாக எடுப்போம். மேலும் தள விதிகளின் சாத்தியமான மீறல்களை மதிப்பாய்வு செய்யும்போது சூழலைக் கருத்தில் கொள்வோம். விதிகளை மீறும் உள்ளடக்கம் Spotifyயிலிருந்து அகற்றப்படக்கூடும். தொடர்ச்சியாக அல்லது கடுமையாக விதிகளை மீறினால், கணக்குகள் இடைநிறுத்தப்படக்கூடும் மற்றும்/அல்லது முடக்கப்படக்கூடும். உள்ளடக்கம் அல்லது கணக்குகளின் மீது நாங்கள் எடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகள் குறித்து இங்கே மேலும் அறிக.
இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
Spotify அனைவருக்கும் வெளிப்படையான பாதுகாப்பான தளமாக இருப்பதை உறுதிசெய்ய இந்தத் தளத்தின் விதிகள் உதவுகின்றன. தேவையைப் பொறுத்து நாங்கள் இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதால் அடிக்கடி இங்கே வந்து பாருங்கள். நீங்கள் பயன்படுத்தும் Spotify தயாரிப்புகளையும் அம்சங்களையும் பொறுத்து, கூடுதல் தேவைகளையும் நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கலாம்.
நான் எவ்வாறு சிக்கலைப் புகாரளிப்பது?
Spotifyயின் உள்ளடக்கத்தில் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தீர்களா? கண்டறிந்துள்ளீர்கள் எனில், இங்கே புகாரளிப்பதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.