Spotifyயின் திட்டம்
Fable மற்றும் இயலாமைகள் கொண்ட நபர்களுடனான காலந்தாய்வைத் தொடர்ந்து Spotify, இந்த ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள தடைகளை அடையாளம் கண்டுள்ளது. மேலும் அவற்றை அகற்றுவதற்கும் தடுப்பதற்கும் Spotify திட்டமிட்டுள்ள உத்திகளையும் வழிமுறைகளையும் கீழே குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
நாங்கள் பணிபுரியும் மற்றும் சேவையை வழங்கும் சமூகங்கள், எங்கள் தளம் ஆகியவற்றில் மக்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் Spotifyயை நாங்கள் உருவாக்கி வருகிறோம். நியாயமான நடைமுறையை ஊக்குவிப்பதிலும், தடைகளை நீக்குவதிலும், ஒவ்வொரு உறுப்பினரும் வளர்ந்து வெற்றி பெறக்கூடிய கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். நம் மக்கள் அனைவரும் மேம்படுவதற்கும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் Spotifyயின் வளர்ச்சியைக் கொண்டு செல்வதற்கும் அணுகல்தன்மையுடன் கூடிய பணியிடத்தை உருவாக்குவது அவசியமாகும். வாய்ப்புகள் அனைவரும் அணுகக்கூடியதாக இருக்கும்போது, நாம் அனைவரும் பயனடைவோம்.
எங்களின் தற்போதைய நிலை
அனைவருக்குமான Spotifyயை உருவாக்குவதற்கான எங்களின் உறுதிப்பாடு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எங்களின் பணியமர்த்தல் செயல்முறை, பணிபுரியும் இடம் தொடர்பான செயல்முறை, இயலாமைகள் கொண்ட பணியாளர்கள் குறித்துப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்த இன்னும் பணிகள் செய்ய வேண்டியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இயலாமை குறித்த தவறான புரிதல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பாகுபாட்டைக் குறைக்கவும் எங்கள் மனிதவள மேலாளர்கள் முன்னின்று செயல்பட ஆதரவளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். எங்களின் சர்வதேசப் பணியிட வசதிகள் தத்துவத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் எங்கள் பணியாளர்கள் அனைவரும் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை நாங்கள் தொடர்ந்து உறுதிசெய்வோம். இறுதியாக, எங்கள் பணியமர்த்தல் செயல்முறையில் (வெளியிலும் உள்ளேயும்) உதவி கோருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அதில் பங்கேற்கும் நபர்களுக்கு உறுதிசெய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
செயல் திட்டம்
- எங்கள் முயற்சிகளை மதிப்பிடுவதற்கு இயலாமை சமத்துவ மதிப்பீட்டில் பங்கேற்றல்.
- இயலாமை மற்றும் நரம்பியல் கோளாறு சார்ந்தவர்கள் குழுவிற்கான நிர்வாக ஸ்பான்சரை அடையாளம் காணுதல்.
- எங்கள் நிறுவனத்திற்கு வெளியிலான ஆட்சேர்ப்பு வலைத்தளம், Spotifyயில் வாழ்க்கை, எங்கள் நிறுவனத்திற்குள்ளான இயக்கத் தளம் உட்பட எங்கள் பணியமர்த்தல் செயல்முறையின் அணுகல்தன்மையை மேம்படுத்துதல்.
- இயலாமை மற்றும் நரம்பியல் கோளாறுடைய பணியாளர்கள், மேலாளர்கள் ஆகியோருக்கான தகவல் மூலங்கள், திட்டங்கள், கருவிகள், உதவி ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்துதல்.
- அனைத்து நிறுவனத்திற்குள்ளான பணியாளர் ஈடுபாட்டு நிகழ்வுகளும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய எங்கள் சமூக அனுபவக் குழுவுடன் கூட்டுப்பணி செய்தல்—எதிர்காலத் திட்டமிடலுக்கு உதவ நிகழ்வுகளின்போது அணுகல்தன்மைக் கோரிக்கைகளைக் கண்காணித்தல்.
- நிறுவனத்திற்குள்ளான மனிதவள மேலாண்மை சிஸ்டங்களையும் செயலிகளையும் தணிக்கை செய்து, அனைத்துப் பணியாளர்களும் அணுகும் வகையில் இருப்பதை உறுதிசெய்வதில் முன்னேற்றம் காணுதல்.
- பணியிட வசதிகள் தொடர்பான செயல்முறையை மதிப்பாய்வு செய்து, மேம்படுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிதல்.
பணிச் சூழல்
Spotifyயில், பணியாளர்கள் தங்களால் எங்கே இருந்து சிறப்பாக வேலை செய்ய முடியுமோ அங்கிருந்து வேலை செய்யலாம்—அது வீடு, அலுவலகம், சில நேரங்களில் முழுமையாக வேறொரு இடமாக கூட இருக்கலாம். அவர்கள் எங்கள் அலுவலகங்களில் இருந்து வேலை செய்யத் தேர்ந்தெடுக்கும்போது, அனைவரும் அணுகக்கூடிய இடங்களை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாகப் பணியாற்றுகிறோம். பணியிடம் அணுகக்கூடிய வகையில் இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்—ஒருவர் தனது பணியிடத்தில் உள்ள விளக்கைத் தானே சரிசெய்ய முடியாவிட்டாலோ வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதைத் தடுக்கும் கொள்கை இல்லாவிட்டாலோ அது வலி, மூச்சு விடுவதில் சிரமம் அல்லது உணர்வுச் சுமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் பணிகளில் கவனம் செலுத்துவது கடினமாகலாம் அல்லது கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
நாங்கள் தெரிந்து கொண்டது"அலுவலகத்தைப் பணியாளர்களுக்கு உகந்த இடமாகவும் அவர்கள் அணுகக்கூடியதாகவும் மாற்ற, அவர்களைப் பணிக்குச் சேர்க்கும்போதும் அதன் பின்னர் அவ்வப்போதும் அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதேபோல், அலுவலகத்திற்குள் வரும் விருந்தினர்களுக்கும் அவர்கள் அனுபவங்களைப் பற்றிய கருத்துகளைப் பகிரவும் அலுவலகம் மேலும் வரவேற்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் அமைய என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்."- Fable கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்
எங்களின் தற்போதைய நிலை
Spotifyயின் உலகளாவிய அலுவலக வடிவமைப்பையும் தளவமைப்பையும் நிர்ணயிக்கும் எங்கள் வடிவமைப்புக் கொள்கைகள் அணுகல்தன்மைக்கான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. தற்போதைய அணுகல்தன்மைத் தரநிலைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்ய, நாங்கள் தொழில்முறை ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுகிறோம். நாங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் அவ்வப்போது பணிச்சூழலியல் ஆலோசனைகளை வழங்குகிறோம். மேலும், தேவைக்கேற்ப உயரத்தை மாற்றக்கூடிய பணி நிலையங்கள், பிற பணிச்சூழலியல் கருவிகள் போன்ற நியாயமான பணியிட வசதிகளை வழங்குகிறோம்.
எங்கள் இடங்கள் "அணுகக்கூடியவை" என்பதற்கான வலுவான வரையறையை பூர்த்தி செய்வதையும் தற்போதுள்ள தடைகளை நீக்கும் வகையில் எங்கள் இடங்களை (நடைபாதைகள், காத்திருப்புப் பகுதிகள் உட்பட) வடிவமைப்பதையும் உறுதிசெய்வது எப்போதும் எங்கள் குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், தானாகத் திறகும் சென்சார்கள் இல்லாத கதவுகள் போன்ற தடைகளை Spotifyயின் அலுவலகங்களுக்குச் செல்லும் போது மக்கள் அவ்வப்போது எதிர்கொள்கின்றனர். இன்று எங்களிடம் தெளிவான அணுகல்தன்மை வழிகாட்டுதல்கள் இருந்தாலும், எங்கள் இடங்கள் முழுவதும் அந்த வழிகாட்டுதல்களை ஒரே சீராகச் செயல்படுத்த முடியவில்லை.
செயல் திட்டம்
- பணியாளர்களுக்கு கிடைக்கும் பல்வேறு இடங்கள் மற்றும் பணியிட வசதிகள் (கவனம் செலுத்துவதற்கான பகுதிகள், பிரசன்டேஷன் பாட்கள் போன்றவை) குறித்துப் பணியாளர்களுக்குத் தெரியப்படுத்துதல்.
- எங்கள் அணுகல்தன்மை வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, அனைத்துப் புதிய திட்டங்களுக்கும் அவற்றைப் பயன்படுத்துதல்.
- எங்கள் வழிகாட்டுதலில் உள்ள குறைகளைத் தணிக்கை செய்து கண்டறிந்து, அவற்றைப் புதுப்பிப்பில் சரிசெய்தல்.
- எங்கள் உலகளாவிய பணியிடச் சேவைகள் குழுவிற்கு அணுகல்தன்மைப் பயிற்சியை வழங்குதல்.
தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பங்கள் (ICT - Information and Communication Technologies)
இந்தப் பிரிவு நாங்கள் உதவி வழங்கப் பயன்படுத்தும் நபர்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாகும். எங்கள் தயாரிப்புகளைப் போலவே Spotifyயில் இருந்து உதவி பெறும் அனுபவம் எளிதானதாகவும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்கள் தளத்தில் பூர்த்தி செய்யப்படாத அணுகல்தன்மைத் தேவைகளை அடையாளம் கண்டு, எங்கள் கருத்துச் செயல்முறை மூலம் அதுகுறித்து எங்களிடம் தெரிவிக்க மக்களை ஊக்குவிக்கிறோம். இந்த அறிக்கைக்காக, தற்போதுள்ள கருத்துகள் அனைத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். மேலும், எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட சிக்கல்களைச் சரிசெய்ய முயன்றுள்ளோம்.
நாங்கள் தெரிந்து கொண்டது"நான் எதிர்கொள்கிற தடைகளையோ பிரச்சனைகளையோ பொறுமையாகக் கேட்க வேண்டும். மேலும், அவை குறித்து அவர் அறிந்திருந்தால் நல்லது. அந்தக் குறிப்பிட்ட பிரச்சனையைப் பற்றிய அறிவு அவருக்கு இருப்பது உதவிகரமாக இருக்கும். இல்லையென்றால், அதற்கான சரியான இடத்திற்கு என்னை மாற்றி அனுப்பவதற்கான வழிமுறையை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்."- Fable கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்
நாங்கள் தெரிந்து கொண்டது"எனது சிக்கல் குறித்து நன்குத் தெரிந்த யாரையேனும் அல்லது உண்மையில் எனக்கு உதவக் கூடிய யாரையனும் தொடர்புகொள்வது எப்படி? [என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்]."- Fable கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்
எங்களின் தற்போதைய நிலை
Spotifyயில் வாடிக்கையாளர் சேவை ("CS - Customer Service") ஆலோசகர்களுக்கு, அணுகல்தன்மை பற்றிய பயிற்சி கட்டாயமானதாகும். அணுகல்தன்மை தொடர்பான கருத்துகளை வழங்க நாங்கள் ஒரு தனிப்பட்ட சேனலை வழங்குகிறோம். மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வையுள்ள நபர்கள் எங்கள் குழுவினரை உதவிக்காகத் தொடர்புகொள்ள Be My Eyes (BME) அமைப்புடன் கூட்டிணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். எங்களுடைய எழுத்துவடிவ உள்ளடக்கங்களில் தெளிவுத்தன்மை, சொற்பயன்பாடு, வடிவமைப்பு ஆகியவற்றைத் தணிக்கை செய்ய, Spotifyயின் நிறுவனத்திற்குள்ளான அணுகல்தன்மைக் குழுவுடன் நாங்கள் கூட்டுப்பணி செய்கிறோம். இருப்பினும், வாடிக்கையாளர் சேவையை வழங்க நாங்கள் பயன்படுத்தும் சில மென்பொருட்களை இன்னும் அதிக அணுகல்தன்மை கொண்டதாக உருவாக்கியிருக்கலாம். பொதுவாகவே எழுத்து அளவு மாற்றம், சரியான நிற வேறுபாடு போன்ற அணுகல் அம்சங்களைக் கொண்டிருக்கும் Spotifyயின் வடிவமைப்பு சிஸ்டத்தைப் பயன்படுத்தாமல் இந்த மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தத் தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் பயிற்சியையும் மேம்படுத்தி எங்கள் ஆதரவு அமைப்பில் உள்ள அனைத்துக் குழுக்களுக்கும் அதை நீட்டிக்க வேண்டியுள்ளது.
செயல் திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளில், வாடிக்கையாளர் சேவைக் குழுவிற்குள் அணுகல்தன்மைக் கலாச்சாரத்தை உறுதியாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
- இயலாமைகள் கொண்ட நபர்களுக்கு உதவுவதற்காக எங்கள் குழுவின் உள்ளே நுட்பமான அறிவு, திறன்கள், கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குதல்.
- இயலாமைகள் கொண்ட பயனர்களுக்கு உயர்மட்டச் சேவையை வழங்க அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சியளித்தல்.
- ஏற்கெனவே உள்ள சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் எங்களின் வாடிக்கையாளர் சேவைத் தளம், சுய சேவைத் தளங்கள், பாட் அனுபவங்கள் ஆகியவற்றின் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கு அவற்றை மேம்படுத்துதல்.
- பணியாளர் அல்லாதோர் அணுகக்கூடிய வாடிக்கையாளர் சேவைக் கருவிகளைத் தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்து அவற்றை மேம்படுத்துவதற்கான செயல்முறையை உருவாக்குதல்.
- ஏற்கெனவே உள்ள சிக்கல்களைத் தீர்த்து, எங்களின் நிறுவனத்திற்குள்ளான ஆப்பரேட்டர் கருவிகளின் அணுகல்தன்மையை மேம்படுத்துதல்.
- வெளித் தரப்பினர் அணுகக்கூடிய நிறுவன ஆப்பரேட்டர் கருவிகளைத் தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்து அவற்றை மேம்படுத்துவதற்கான செயல்முறையை உருவாக்குதல்.
- அணுகல்தன்மை தொடர்பான பரிமாற்றங்களைச் சிறப்பாகக் கையாள்வதற்காக எங்களின் செயல்திறன் மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குதல்.
- அணுகக்கூடிய எழுத்துத் தரநிலைகளை (Spotifyயின் வடிவமைப்பு சிஸ்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளபடி) பிரதிபலிக்கும் வகையில் எங்களின் படைப்புரிமைத் தத்துவத்தைப் பராமரித்து மதிப்பாய்வு செய்தல் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளையும் கற்கும் பாணிகளையும் பூர்த்திசெய்யும் உள்ளடக்கத்தை வெளியிடுதல்.
- வாடிக்கையாளர் கருத்து, வழக்கமான தணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்துதல்.
ICT அல்லாத பிற தகவல்தொடர்புகள்
பிராண்டு, தகவல்தொடர்புகள், பார்ட்னர்ஷிப்கள் உள்ளிட்ட குழுக்களால் முன்னெடுக்கப்படும் Spotifyயின் நிறுவனத்திற்குள்ளான மற்றும் நிறுவனத்திற்கு வெளியிலான தகவல்தொடர்புகள் இதிலடங்கும். எங்கள் பணியாளர்கள் நிறுவனத்திற்குள்ளான எழுத்து மற்றும் நேரலைச் சேனல்கள் மூலம் எங்களிடமிருந்து தகவல்களைப் பெறுகிறார்கள். அதே நேரம், நிறுவனத்திற்கு வெளியே உள்ளவர்கள் எங்களை வெளிப்புற விளம்பரங்களிலோ (OOH - Out Of Home) சமூக ஊடக ஊட்டங்களிலோ காணக்கூடும்.
எங்களின் தற்போதைய நிலை
எங்களின் தகவல்தொடர்புகள் அனைத்திலும் அணுகக்கூடிய உள்ளடக்கத்தை வழங்க நாங்கள் கடினமாகப் பணியாற்றுகிறோம். மேலும், தரநிலைகளைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வதிலும் மேம்படுத்துவதிலும் உறுதியாக உள்ளோம். வெளியீடுகளுக்கான எங்கள் நடைமுறைகளில் மேம்பட்ட வளர்ச்சியை நோக்கிய முயற்சியை இந்தத் திட்டம் குறிக்கிறது.
செயல் திட்டம்
- எங்கள் நியூஸ் ரூம், சமூக ஊடகச் சேனல்கள் போன்ற ஆன்லைன் அனுபவங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிக்கான வடிவமைப்புகளையும் தகவல்தொடர்புகளையும் பயன்படுத்துதல் மற்றும் தரநிலைப்படுத்துதல்.
- நிறுவனத்திற்குள்ளான மற்றும் நிறுவனத்திற்கு வெளியிலான படங்கள், உடைமைகள், விளக்கக்காட்சிகள் ஆகியவற்றுக்கான சிறந்த நடைமுறைகளைக் கட்டமைத்தல்.
- பணியாளர்கள் நிறுவனத்திற்குள்ளேயே உடைமைகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க ஒரு சிஸ்டத்தை உருவாக்குதல்.
- சந்தைப்படுத்தல் உடைமைகளையும் தகவல் ஆதாரங்களையும் தணிக்கை செய்து, அவற்றில் நாங்கள் ஏதேனும் சாத்தியமுள்ள மேம்பாடுகளையோ உதவிகரமான தகவல்களையோ சேர்க்க முடியுமா என்பதைக் கண்டறிதல்.
- அனைத்து சமூக ஊடகச் சேனல்களும் தானாக உருவாக்கப்படும் வசனங்களையும் தளத்திற்குள்ளான பிற அணுகல்தன்மை அம்சங்களையும் இயக்கியிருப்பதை உறுதிசெய்ய பிராந்தியங்களுடன் இணைந்து பணிபுரிதல்.
- அனுபவம் அடிப்படையிலான சந்தைப்படுத்தலுக்கான எங்கள் நடப்புத் தரநிலைகளை மதிப்பீடு செய்து, கூடுதல் நடவடிக்கைகளைத் திட்டமிட Fable நிறுவனத்துடன் ஆலோசனை நடத்துதல்.
- நேரில் பங்கேற்கும் அனுபவங்களின்போது சாத்தியமுள்ள அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அழைக்கப்படுபவர்களுக்கு நிகழ்விற்கு வருவதற்கு முன்பான தகவல்தொடர்புகளை அனுப்புதல் (உதாரணமாக, “இந்த நிகழ்வில் மின்னும் விளக்குகள் இடம்பெறக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்”).
பொருட்கள், சேவைகள், வசதிகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்தல்
Spotifyயில், 'கொள்முதல்' என்பது மென்பொருட்கள், கிளவுட் உட்கட்டமைப்பு, அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள், தொழில்முறை மற்றும் கார்ப்பரேட் சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. இந்தப் பெரிய செயல்பாட்டில் கோரிக்கை, மதிப்பீடு, பேரம் பேசுதல், இறுதிசெய்தல் ஆகிய நான்கு கட்டச் செயல்முறைகள் உள்ளன. எங்கள் செயல்பாட்டில் அணுகல்தன்மை உள்ளடங்கி இருப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நாங்கள் தெரிந்து கொண்டது"நிறுவனங்கள் Spotifyக்கு உண்மையான மதிப்பை வழங்குகின்றனவா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 'நாம் இப்போது அணுகல்தன்மையை அடைந்துவிட்டோம்!' என்று சொல்லக்கூடிய சில விஷயங்களைப் பூர்த்தி செய்கிறது என்ற காரணத்திற்காக மட்டும் எந்தவொரு தேவையற்ற மென்பொருளையும் வாங்கக்கூடாது."- Fable கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்
எங்களின் தற்போதைய நிலை
கொள்முதல் குழு என்ற முறையில், எங்களின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்ததில் Spotify for Vendors இணையதளத்தில் அணுகல்தன்மை தொடர்பான எங்களின் நிலைப்பாடு குறிப்பிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தோம். கூடுதலாக, விற்பனையாளர்களைத் தேர்வுசெய்யும்போதும் சேர்த்துக்கொள்ளும்போதும் தற்போது அணுகல்தன்மையை நாங்கள் ஒரு தகுதியாகக் கருத்தில் கொள்வதில்லை என்பதையும் கண்டறிந்தோம்.
செயல் திட்டம்
- Spotify for Vendors வலைதளத்தில் எங்களின் அணுகல்தன்மை அறிக்கையைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை அளித்தல். இது கொள்கையின் நிறுவனத்திற்குள்ளான மற்றும் நிறுவனத்திற்கு வெளியிலான சமூகப்படுத்தலுக்கு உதவும்.
- அணுகல்தன்மை தொடர்பான பரிசீலனைகளை மதிப்பிட, தொடர்புடைய செலவு வகைகளில் உள்ள முக்கிய விற்பனையாளர்களை மதிப்பாய்வு செய்தல்.
- தொடர்புடைய வகைகளுக்கான தற்போதைய விருப்பக் கோரிக்கை (RFP - Request For Proposal) செயல்முறை, விற்பனையாளரைச் சேர்த்தல் செயல்முறை ஆகியவற்றில் அணுகல்தன்மைக் கேள்விகளை இணைப்பதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
திட்டங்களையும் சேவைகளையும் வடிவமைத்தல் மற்றும் வழங்குதல்
வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் Spotify தயாரிப்புகளை உருவாக்குவதற்குப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் நாங்கள் பயிற்சியளிக்கும் விதம், அணுகல்தன்மையுடன் கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் அணுகுமுறை, அனைத்து வகையான பயனர்களுக்கும் முடிந்தவரை அவற்றை அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் பயன்படுத்தும் வடிவமைப்பு நடைமுறைகள் ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும்.
இந்த முக்கியமான வகையை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளோம்:
- பயிற்சி மற்றும் ஆவணப்படுத்துதல்
- குழு
- தணிக்கைகள், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு
- செயல்முறை
Spotifyயின் பிரத்தியேகப் பயிற்சி, அணுகல்தன்மை, வடிவமைப்பு ஆகிய குழுக்கள் இந்த வகைக்கான பகிரப்பட்ட உரிமையைக் கொண்டுள்ளன.
நாங்கள் தெரிந்து கொண்டது“அனைவராலும் அந்த வடிவமைப்பைச் சமமாகப் பயன்படுத்த முடியவேண்டும். அனைவராலும் அதைப் பயன்படுத்தவும் பணிகளைச் செய்து முடிக்கவும் முடியவேண்டும்."- Fable கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்
எங்களின் தற்போதைய நிலை
அணுகக்கூடிய தயாரிப்புகளை உருவாக்க உதவுவதற்கு பயிற்சி, அணுகல்தன்மை, வடிவமைப்பு சிஸ்டங்கள் மற்றும் தலைமைத்துவக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இன்னும் நிறைய மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. எங்கள் டிஜிட்டல் தயாரிப்புகளும் கருவிகளும் இயலாமை கொண்ட நபர்களால் பரிசோதிக்கப்படாதபோது, அவை பயன்படுத்தக் கடினமாக இருக்கலாம். இது பணியாளர்கள் வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும் அல்லது பயன்படுத்த மேலும் எளிதாக உள்ள மற்றொரு சேவைக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதற்கு வழிவகுக்கும். மேலும், பணியாளர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லையென்றால், இயலாமைகள் கொண்ட பணியாளர்களின் பணியில் நீடித்தல் மற்றும் பதவி உயர்வு விகிதம் குறைவதற்கோ இயலாமைகள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மோசமான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கோ வழிவகுக்கும்.
பயிற்சி மற்றும் ஆவணப்படுத்துதல்
- நாங்கள் அணுகல்தன்மை தொடர்பான கோர்ஸ்களையும் செய்முறை அமர்வுகளையும் நடத்துகிறோம்.
- டிஜிட்டல் அணுகல்தன்மை குறித்த அறிமுகம், அணுகக்கூடிய பயனர் அனுபவம், அணுகல்தன்மையைப் பரிசோதித்தல், அணுகக்கூடிய வலைதள உருவாக்கம், iOS-க்கான அணுகக்கூடிய மொபைல் செயலிகள், ஆண்ட்ராய்டுக்கான அணுகக்கூடிய மொபைல் செயலிகள் உள்ளிட்ட Fable-இன் இணையவழிக் கற்றல் தொகுப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.
- எங்களின் ஆன்லைன் கற்றல் தளமான Greenhouse-இல் இந்தத் தொகுப்புகளை நிறைவு செய்யும் விகிதங்களைக் கண்காணிக்கிறோம்.
- அணுகல்தன்மைத் திட்டம் தொடர்பான டாஷ்போர்டுகளும் விரிவான அளவீடுகளும் எங்களிடம் இல்லை.
- பணியாளர்கள் பயன்படுத்தும் நிறுவனத்திற்குள்ளான Spotify தளங்கள், தயாரிப்புகள் ஆகியவற்றில் அணுகல்தன்மையை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
- அனைத்துப் பார்வையாளர்களுக்கும் அணுகல்தன்மை தொடர்பான விரிவான ஆவணங்கள், செயல்பாடுகள், தகவல் மூலங்கள் ஆகியவை எங்களிடம் உள்ளன. ஆனால், கூடுதல் ஒழுங்கமைவு, தெளிவுத்தன்மை, முனைப்புடன் கூடிய அகச் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான தேவை எப்போதும் உள்ளது.
குழு
- அணுகல்தன்மைக்கு முன்னுரிமையளிக்கும் குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் பரிசுகளை வழங்குகிறோம்.
- Fable உட்பட (ஆனால் இது மட்டும் அல்ல) பல அணுகல்தன்மை வழங்குநர்களுடன் எங்களுக்குத் தொடர்பு உள்ளது.
- அணுகல்தன்மைப் பொறியாளர்கள், பொறியியல் மேலாளர், திட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்ட பிரத்தியேகக் குழு எங்களிடம் உள்ளது.
- தயாரிப்புக் குழுக்களில் அணுகல்தன்மைக்கு எனத் தனியாக யாரும் நியமிக்கப்படவில்லை.
அணுகல்தன்மைத் தணிக்கைகள், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு
- அணுகல்தன்மைத் தணிக்கையையும் ஏற்கெனவே உள்ள தணிக்கைகளையும் கேட்பதற்கு என ஒரு செயல்முறை உள்ளது.
- Spotifyயில் அனைத்துப் பயனர் பரிசோதனைகளையும் ஆய்வுகளையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம்.
- வெளியீட்டிற்கு முந்தைய எங்கள் பரிசோதனை குறைவான வரம்பையே கொண்டுள்ளது. உதவித் தொழில்நுட்பப் பயனர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
செயல்முறை
- அணுகக்கூடிய வண்ணத் தீம்கள், எழுத்து அளவுகள், கூறுகள், தளவமைப்புகள் ஆகியவற்றை எங்களின் வடிவமைப்பு சிஸ்டம் வழங்குகிறது.
- எங்கள் வடிவமைப்பு சிஸ்டம் வலைதளத்தில் அணுகக்கூடிய வடிவமைப்பு மற்றும் எழுத்து தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- அதிகபட்ச அணுகல்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் திறன் வடிவமைப்புக் குழுக்களுக்கு சில சமயங்களில் இருக்காது. மேலும் பிற வடிவமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிரமத்தை எதிர்கொள்வர்.
- எங்களுக்கு இருக்கக்கூடிய வேறு சில முன்னுரிமைகள் காரணமாக, அணுகக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சற்று காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்படலாம். அதாவது, அணுகல்தன்மைச் சிக்கல்களை வெளியீட்டுக்குப் பிறகே நாங்கள் சரிசெய்வோம்.
செயல் திட்டம்
பயிற்சி மற்றும் ஆவணப்படுத்துதல்
- அனைத்து ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணியாளர்களும் அணுகல்தன்மைப் பயிற்சியை நிறைவுசெய்யுமாறு ஊக்குவித்தல்.
- குறிப்பிட்ட தயாரிப்புப் பகுதிகளுக்கு மிகவும் பொருந்தும் வகையில் கோர்ஸ்களைப் புதுப்பித்தல்.
- ஆழ்ந்த, பொறுப்பு சார்ந்த பயிற்சியை முடிக்க பணியாளர்களை ஊக்குவித்தல்.
- குழுக்கள் தாங்களே பயிற்சி செய்து பார்க்கக் கூடிய அணுகல்தன்மைத் தொகுப்புகளை உருவாக்குதல்.
- நிறுவனத்திற்குள்ளான விழிப்புணர்வை அதிகரிக்க, ஏற்கெனவே உள்ள கோர்ஸ்களுக்கான தகவல்தொடர்புத் திட்டத்தை உருவாக்கித் திட்டமிடுதல்.
- மேம்படுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிய, திட்டத்தின் முடிவுகளை மதிப்பாய்வு செய்து கருத்துகளைச் சேகரித்தல். எதிர்காலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படும்போது திட்டத்தில் மாற்றம் செய்தல்.
- சேர்க்கை, கருத்துத் தரவு ஆகியவை உட்பட பயிற்சியில் இருந்து பெறப்படும் முக்கிய அளவீடுகளைப் புள்ளிவிவரங்கள் குழுவினருக்கு வழங்கி, இந்தத் தரவின் மூலம் பயிற்சி உள்ளடக்கத்தையும் அதன் கிடைக்கும் நிலையையும் மேம்படுத்துதல்.
குழு
- எங்களின் நிறுவனத்திற்குள்ளான அணுகல்தன்மை சாம்பியன்கள் நெட்வொர்க்கை உருவாக்குதல். மேலும் பிற செயல்பாடு சாராத தேவைகளுடன் அணுகல்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதைத் தக்கவைப்பதற்கு பிற பணியாளர்களுக்கு உத்வேகம் அளிக்குமாறு அந்த நெட்வொர்க்கை ஊக்குவித்தல்.
- எங்களின் நிறுவனத்திற்குள்ளான அணுகல்தன்மை சாம்பியன்கள் நெட்வொர்க்கை மேம்படுத்தி தொடர்ந்து அணுகல்தன்மையைப் பரிந்துரைத்தல்.
- Spotifyயில் எங்களின் அனுபவம் வாய்ந்த நிறுவனத்திற்குள்ளான அணுகல்தன்மை சாம்பியன்கள் நெட்வொர்க்கை முறையான பணி வளர்ச்சிக் கட்டமைப்பாக மாற்றுதல், உதாரணமாக, அணுகல்தன்மை உருவாக்கத்தில் அதிகப் பங்களிப்பை வழங்குவதை Spotifyயின் பணி கட்டமைப்பிற்கான ஒரு தரநிலையாக நிர்ணயித்தல்.
அணுகல்தன்மைத் தணிக்கைகள், ஆய்வு மற்றும் பகுப்பாய்வு
- Spotifyயில் அணுகல்தன்மையின் நிலை குறித்துத் தணிக்கைகள் மூலம் (இயலாமைகள் கொண்ட நபர்கள் உட்பட) தொடர்ந்து மதிப்பாய்வு செய்தல். சிக்கலைக் கண்டறிவதற்கும் அதைத் தீர்ப்பதற்கும் இடையிலான நேரத்தைக் குறைக்க, பதிலளிப்பு நேரத்தைக் கண்காணித்தல்.
- ஆக்கப்பூர்வமான தயாரிப்பு பிராண்டிங்கின் மூலம் அணுகல்தன்மைத் தரநிலைகளை உறுதிசெய்தல்.
- தரவை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு, கதைசொல்லல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அணுகல்தன்மைப் பணிகளைக் கண்காணித்தல், நிறுவனம் முழுவதிலும் முனைப்புடன் செயல்படுபவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தல்.
- Spotifyயின் குறுதளங்களையும் வலைதளங்களையும் தணிக்கை செய்தல்.
- தணிக்கை மற்றும் அணுகல்தன்மை வரம்பை நிறுவனத்திற்குள்ளான தயாரிப்புகளுக்கு விரிவாக்குதல்.
செயல்முறை
- தயாரிப்பைக் கண்டறியும் நிலைக்கு:
- பொருத்தமான கருவிகள், பரிசோதனை உள்கட்டமைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றால் பயனடையக்கூடிய வடிவமைப்பு, தயாரிப்பு, மென்பொருள் உருவாக்கச் செயல்முறைகள் ஆகியவை தொடர்பான அனைத்து முக்கிய நிலைகளையும் கண்டறிந்து பட்டியலிடுதல்.
- எங்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, மென்பொருள் உருவாக்கப் பணிமுறைகள் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளில் பொருத்தமான கருவிகள், பரிசோதனை உள்கட்டமைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றை உருவாக்குதல்/ஒருங்கிணைத்தல்.
- மீண்டும் செய்தல் மற்றும் பராமரிப்பு நிலை:
- தயாரிப்பு உருவாக்கச் செயல்முறையின் தொடக்கத்திலேயே அணுகல்தன்மை மீது கவனம் செலுத்த உதவும் பொருத்தமான கருவிகள், பரிசோதனை உள்கட்டமைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றில் முதலீடு செய்தல்.
- தொடர்புடைய அணுகல்தன்மை உள்ளடக்கத்தில் தனிப்பட்ட முறையில் திருத்தங்கள் செய்வதற்கு Spotify பணியாளர்களுக்குப் பணிமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
- சிக்கல்கள் எழும்போது அவற்றைச் சரிசெய்வதற்கான தொடர் உதவியை வழங்குதல்.
- ஆக்கப்பூர்வமான தயாரிப்பு பிராண்டிங்கின் மூலம் அணுகல்தன்மைத் தரநிலைகளை உறுதிசெய்தல்.