"எங்களைப் பற்றிய விஷயங்களில் எங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்" (Nothing About Us Without Us) என்பது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் இயக்கத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். இயலாமை கொண்ட நபர்களுக்காகச் செய்யப்படும் எந்தவொரு பணியிலும் கண்டுபிடிப்பிலும் அவர்களின் முழுப் பங்களிப்பு இருப்பதற்கான தேவை குறித்து இது விளக்குகிறது. இயலாமைகள் கொண்ட நபர்களால் நடத்தப்படும் அணுகல்தன்மை தளமான Fable உடன் இணைந்து கூட்டுப்பணி செய்வது இந்தக் கொள்கையின்படி நாங்கள் செயல்படும் வழிகளில் ஒன்றாகும். Fable குழுவினருடனும் எங்கள் நிறுவனத்திலுள்ள #able சமூகத்தினருடனும் (இயலாமைகள் மற்றும் நரம்பியல் சார் குறைபாடு கொண்ட பணியாளர்களின் குழு) இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் கலந்தாய்வு செய்தோம்.
Fable-இன் உதவியுடன் இயலாமைகள் கொண்ட 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் அணுகல்தன்மை தொடர்பான அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் குறித்து Spotify கருத்துக்களைப் பெற்றது. பார்வை, கேட்டல், புத்தி, பேச்சு மற்றும்/அல்லது இயக்கம் ஆகியவற்றிற்கான உதவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மக்களின் கண்ணோட்டங்களும் பதில்களில் அடங்கும். வாடிக்கையாளர் உதவி, தகவல் தொடர்புகள், பணியமர்த்தல், இடங்கள், டிஜிட்டல் தயாரிப்புகள், பணியிட வசதிகள் போன்ற பல்வேறு தலைப்புகள் இந்த ஆய்வில் உள்ளடங்கியிருந்தன. அதே தலைப்புகளில் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, பல்வேறு அணுகல்தன்மைத் தேவைகளைக் கொண்ட நான்கு நபர்களைக் கொண்டு Fable ஓர் ஆன்லைன் ஃபோகஸ் குழு அமர்வையும் நடத்தியது. Spotifyயின் அணுகல்தன்மைத் திட்டத்தை உருவாக்குவதில் இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் பெற்ற தகவல்களும் பயன்படுத்தப்பட்டன.
திட்டம் வரைவு செய்யப்பட்ட பிறகு, இயலாமைகள் கொண்ட மேலும் 5 பங்கேற்பாளர்களுடன் கூடுதல் ஃபோகஸ் குழு கூட்டம் நடத்தப்பட்டது அதில் அவர்கள் வரைவை மதிப்பாய்வு செய்து கருத்துக்களை வழங்கினர். திட்ட உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இயலாமைகள் கொண்ட நபர்களை ஈடுபடுத்தும் இந்த அணுகுமுறை, மேம்பாடுகளைச் செய்ய வேண்டிய பகுதிகளைக் கண்டறிய உதவியது மற்றும் அடுத்த மூன்று வருடங்களில் அணுகல்தன்மை தொடர்பான Spotifyயின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விதம் குறித்த நம்பிக்கையையும் அளித்துள்ளது.
எங்கள் கலந்தாய்வு இந்தத் திட்டத்தின் உருவாக்கத்திற்கு எப்படி வழிவகுத்தது என்பதற்கான எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் உதவி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பவர் உதவித் தொழில்நுட்பம் மற்றும் அணுகல்தன்மை குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்கள் தெரிவித்தனர். இந்தக் கருத்தின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் "தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பங்கள் (ICT - Information and Communication Technologies)" பிரிவில், இயலாமைகள் கொண்ட நபர்களுக்கு உதவுவதற்காக மேம்பட்ட அறிவு, திறன்கள், கருவிகள் ஆகியவற்றுடன் எங்களின் தற்போதைய குழுவை விரிவுபடுத்துவதில் Spotify உறுதியாக உள்ளது.